

2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 31-ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் இன்று குற்றங்கள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உத்தரவு தயார் நிலையில் இல்லாத காரணத்தால் அக்டோபர் 31-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
2ஜி வழக்கில் தொலைத் தொடர்புத் துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து ரூ. 200 கோடி, கலைஞர் டி.வி.க்கு கைமாறியது குறித்து அமலாக் கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பின் வாதங்கள் முடிவடைந்த பிறகு, வரும் அக்டோபர் 20-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்திருந்தார்.
ஆனால், இதற்கான நீதிமன்ற உத்தரவு தயார் நிலையில் இல்லாத காரணத்தால் அக்டோபர் 31-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அக்டோபர் 29-ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.