

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக அவசரச் சட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பரிந்துரைத்த ஊழல் தடுப்பு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட முடியவில்லை.
இந்நிலையில் ராகுல் பரிந்துரைகளை அவசரச் சட்டமாக நிறைவேற்றுவது குறித்து நேற்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருந்தது.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மூத்த அமைச்சருமான சரத் பவார், ஆட்சி முடியும் நேரத்தில் இத்தகைய அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று போர்க்கொடி தூக்கியதால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
இதே கேள்வியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் எழுப்பக்கூடும் என்ற காரணத்தால், நேற்று, அவசரச் சட்டம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டப்படுகிறது. இது, ஊழலுக்கு எதிரான அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து விட்டதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு மசோதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா அகியவற்றை மத்திய அரசு அவசரச் சட்டமாக நிறைவேற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது.