விரைவில் திருமணம்: தொண்டரின் கேள்விக்கு ராகுல் பதில்

விரைவில் திருமணம்: தொண்டரின் கேள்விக்கு ராகுல் பதில்
Updated on
1 min read

தனது திருமணத்திற்கு இனி அதிகம் காத்திருக்கத் தேவையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதை அவர் உத்தரப் பிரதேசத்தின் பைரைச்சில் கலந்து கொண்ட சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்த கேள்விக்கு பதிலாக அளித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்காக ராகுல் காந்தி(46) தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று, (வெள்ளிக்கிழமை) நேபாள எல்லையில் இருக்கும் பைரைச்சில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பேசி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியவரிடம் ஒரு சுவையான கேள்வி எழுந்தது. அவரை சுற்றி வளைத்த பொதுமக்களில் உ.பி இளைஞர் ஒருவர், 'ராகுல் சித்தப்பா, சித்தியை எப்போது கொண்டு வருவீர்?' எனக் கேட்டார். இதை கேட்டு புன்முறுவல் பூத்த ராகுல் முகத்தை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினர். எனவே, வேறுவழியின்றி ராகுல், 'இதற்காக இனி அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை' எனப் பதில் அளித்தார். இதை கேட்டு அங்கிருந்து கூட்டம் மகிழ்ச்சியுடன் ஆர்பரித்து 'ராகுல்ஜி! ஜிந்தாபாத்!' எனக் கோஷமிட்டது.

இதுபோல், ராகுலிடம் அவரது திருமணம் குறித்து கேள்விகள் எழுவது முதன்முறை அல்ல. கடந்த 2014 மக்களவை தேர்தலில் அவர் முதன்முறையாக அரசியல் களம் இறங்கினார். இதற்காக அவர் போட்டியிட்ட அமேதி தொகுதி பிரச்சாரத்தின் போது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார். பிறகு, செய்தியாளர்களிடம் ராகுல் சாவகாசமாகப் பேசிய போதும் இந்த கேள்வி எழுந்ததாகவும், இதற்கு ராகுல், தான் ஒரு வெளிநாட்டு பெண்ணின் காதலில் இருப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து ராகுல் கலந்து கொள்ளும் பல கூட்டங்களில் இந்த கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது. ஆனால், முதல் முறையாக ராகுல் அதற்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலையிலும் ராகுல் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தை சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பத்து பெண்ணை மணமுடிக்க இருப்பதாக செய்திகள் பரவின. இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பரமணியன் சுவாமியும், 'உ.பி. தேர்தலுக்கு முன்பாக ராகுல் மணமுடிக்க இருப்பதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் திருமணம் குறித்து வெளியானது ஆதாரமில்லாத புரளி என மறுப்பு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in