காஸ் சிலிண்டர்: விரும்பிய டீலர்களை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்

காஸ் சிலிண்டர்: விரும்பிய டீலர்களை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்

Published on

சமையல் எரிவாயு விநியோகஸ்தரை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி புதன்கிழமை டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இப்புதிய வசதியின் மூலம், ஓர் எண்ணெய் நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு அல்லது மற்றொரு விற்பனையாளருக்கு வாடிக்கையாளர் மாறிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் வசிக்கும் பிராந்தியத்திற்குள் உள்ள விநியோகஸ்தர்களில் எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இப்புதிய திட்டம் நாட்டிலுள்ள 480 மாவட்டங்களில் உடனடியாக அமலுக்கு வருகிறது.

கட்டணம் இல்லை

ஒரே நிறுவனத்துக்குள் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக் கொள்வது எளிது. அதேசமயம் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுவதில் சில கூடுதல் நடைமுறைகள் உள்ளன.

அனைத்து நிறுவனங்களின் சமையல் எரிவாயு உபகரணங் களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆகவே, வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாற வேண்டுமெனில், நுகர்வோர்கள் தங்கள் நிறுவனத் தின் சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டர்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். திரும்பப் பெறத்தக்க வகையில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகையைப் பெற்றுக் கொள்வதுடன், மாற்றிக் கொள்வதற்கான ஆவணங் களையும் பெற வேண்டும். பின்னர், விரும்பிய நிறுவனத்துக்குச் சென்று அங்கு மறு இணைப்பைப் பெற வேண்டும்.

அதேசமயம், புதிய வசதியின் கீழ் சேவையளிக்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்வதற்காக எவ்விதக் கட்டணமோ, கூடுதல் வைப்புத் தொகையோ செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in