

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத் தில் தமிழகம் - கர்நாடகா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதனால் தமிழக அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்தோம். இதில் பங்கேற்ற பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர்.
எனினும் முதல்வர் என்ற முறை யில் அரசியல் சாசனத்தை செயல் படுத்தும் பொறுப்பில் இருப்பதால், அவர்களின் எதிர்ப்பை அப்புறப் படுத்திவிட்டு தமிழகத்துக்குத் தண் ணீர் திறந்து விட ஆணையிட்டேன்.
இதனால் பெங்களூருவின் குடி நீருக்கும், வேளாண் தேவைக்கும் கடும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் மேட்டூர் அணையிலுள்ள நீரும், விரைவில் தொடங்கவிருக்கும் தென்கிழக்கு பருவ மழையும் அம் மாநில விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வித மாக இருக்கும். என்றாலும் கர் நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவேசமடைந் துள்ள பல்வேறு தரப்பினர் கர்நாட கம் முழுவதும் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருவதால் பதற் றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தொழில்களும் முடங்கியுள்ளன.
கடந்த 1995-ல் இதே போன்ற சூழல் எழுந்தபோது, அப்போதைய பிரதமர் தலையிட்டு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். அதே போல், தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தலையிட வேண்டும். தவிர காவிரி நதியுடன் தொடர்புடைய கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேச ஒற்றுமையை காக்கும் பொறுப்பு பிரதமர் என்ற முறையில் தங்களுக்கு இருப்பதால், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அவசர அமைச்சரவைக் கூட்டம்
பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் அரசு இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, 60 டிஎம்சி நீரை கோரும் தமிழக அரசின் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தவிர சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தையும் கூட்ட முதல்வர் சித்தராமையா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.