காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிட லஷ்கர் தீவிரவாதிகளை வழிநடத்தும் பாக். ராணுவம்: என்ஐஏவிடம் பகதூர் அலி ஒப்புதல் வாக்குமூலம்

காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிட லஷ்கர் தீவிரவாதிகளை வழிநடத்தும் பாக். ராணுவம்: என்ஐஏவிடம் பகதூர் அலி ஒப்புதல் வாக்குமூலம்
Updated on
1 min read

தீவிரவாதிகளைப் பயன்படுத்தி, காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிட்டு அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டிருப்பது, தேசிய புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்மையில் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி பகதூர் அலி அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உதவுவதாக இந்தியா தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறையை தூண்டிவிட்டு, அமைதியற்ற சூழலை உருவாக்க, பாகிஸ்தான் திட்டமிட்டதாக சந்தேககிக்கபப்ட்டது.

அவ்வப்போது எல்லைப் பகுதியில் நடக்கும் ஊடுருவல் முயற்சிகள் இதை உறுதி செய்வதாக இருந்தாலும், இச்சந்தேகத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், கடந்த மாதம் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரிடம், பகதூர் அலி என்ற லஷ்கர் தீவிரவாதி பிடிபட்டார்.

காஷ்மீர் வன்முறையில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பகதூர் அலியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தேசிய புலனாய்வுப் பிரிவு ஐஜி சஞ்சீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜூலை 25-ம் தேதி, வடக்கு காஷ்மீரில் பிடிபட்ட பகதூர் அலி என்கிற அபு சைபுல்லா, லாகூரைச் சேர்ந்தவன். தொடக்கத்தில் ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்தான். பின்னர், லஷ்கர் அமைப்புக்காக தயார் செய்யப்பட்டுள்ளான்.

மான்ஷேரா, அக்சா மற்றும் முசாஃபராபாத்தில் லஷ்கர் தீவிரவாத பயிற்சிகளை 3 கட்டங்களாக பெற்றுள்ளான். லஷ்கர் பயிற்சி முகாம்களில், தன்னுடன் 30 முதல் 50 பேர் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் பாகிஸ்தான் மற்றம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அவன் கூறினான்.

தான் இந்தியாவுக்கு வரும் முன்பாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தன்னை சந்தித்ததாக பகதூர் அலி விசாரணையில் தெரிவித்தான். சாதாரண உடையில் பயிற்சி முகாமுக்கு வந்ததாகவும், அவர்களை மேஜர் சாப் மற்றும் கேப்டன் சாப் என அங்கிருந்தவர்கள் அழைத்ததாகவும் பகதூர் அலி கூறினான்.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை கையாள்வதற்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆல்ஃபா 3’ என்ற கட்டுப்பாட்டு அறையை பாகிஸ்தான் ராணுவமும், லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் நடத்திவருகின்றன.

காஷ்மீர் உள்ளிட்ட இந்திய பகுதிகளில் இருந்து ஆல்ஃபா-3 கட்டுப்பாட்டு மையத்துக்கு, அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்காக தீவிரவாதிகளுக்கு பிரத்தியேகமான, அதி நவீன ஜப்பான் தயாரிப்பு ஒயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பகதூர் அலிக்கு மிகத் திறமையான, தேர்ந்த நபர்கள் பயிற்சி அளித்திருக்கின்றனர்.

இவ்வாறு சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.

இத்தகவல்களை, பகதூர் அலி, தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து, முக்கிய ஆதாரமாக அதிகாரிகள் வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in