

தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகார பூர்வ பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி யிருந்தால், அது தொடர்பான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: “பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில் பலர் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் கருத்துகளுக்கு மட்டுமே இந்திய அரசு பதிலளிக்கும்.
தேவயானி வழக்கு தொடர்பாக மறு ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அது தொடர்பாக அதிகாரபூர்வ பதிலை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகமும், அமைச்சர் ஜான் கெர்ரியும் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் பற்றிய விவரங்களை கோரியுள்ளோம். தற்போது விடுமுறை காலமாக இருப்பதால், அந்த விவரங்களை அவர்கள் தருவது தாமதமடைந்துள்ளது.
அவர்கள் தரும் விவரங்களை விரிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதை ஆய்வு செய்வதற்கு சட்டம், நிதி, மனித வள மேம்பாட்டுத் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்” என்றார்.
தேவயானி வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சங்கீதாவின் கணவர் மற்றும் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அந்நாட்டு அரசு அழைத்துச் சென்றபோது, விமான டிக்கெட் கட்டணத்தில் வரிச்சலுகை பெற்றுள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை விசாரித்து வருகிறது. அந்த சலுகையை பெற்று தந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி யார் என்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.