

ஆம் ஆத்மி கட்சியில் உட்பூசல், பிளவு என வெளியான செய்திகள் அனைத்தையும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லி, லஷ்மி நகர் தொகுதி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, நேற்று ஆம் ஆத்மி ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்ததும், அவர் ஆவேசமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததும், ஆம் ஆத்மியில் விரிசல் என்ற செய்தியை வேகமாக பரப்பியது.
இந்நிலையில், கட்சியில் எந்த பிளவும் இல்லை என தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ பின்னி தன்னை நேற்று மாலை சந்தித்தாகவும் அப்போதே அவர், தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதே தகவலை, வினோத்குமார் பின்னியும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பதவியேற்பு இல்லை:
டெல்லியில் ஆட்சி அமைக்க கடந்த 23-ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து உரிமை கோரினார்.
ஆனால், இதுவரை ஆளுநர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால், பதவியேற்பு விழா நாளை நடைபெற வாய்ப்பு இல்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.