

உத்தரப்பிரதேசத்தில் வரவிருக் கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கட்சியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் வாக்குச் சாவடி நிலையிலான கட்சித் தொண்டர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்பேரில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 27 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தைப் பல்வேறு கட்சியினர் ஆண்டுள்ளனர். அவர்களில் சிலர், இந்து முஸ்லிம் சண்டையை ஏற்படுத்தினர். ஆனால், யாரும் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி பேசவில்லை. ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசம் முன்னணியில் இருந்தது. அது மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும்.
இம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பொய்மை அரசியலில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் எப்போதும் தலித்துகள், விவசாயிகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் பக்கம் இருக்கிறது. தலித்துகள் மீதான அத்துமீறலைக் கேள்விப்படும்போதெல்லாம் அங்கு நான் உடனடியாகச் செல்கிறேன்.
டெல்லியின் முகத்தை ஷீலா தீட்சித் மாற்றிக் காட்டினார். வேலை செய்யாமல் நாடகமாடும் கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் டெல்லி மக்கள் தவறிழைத்து விட்டனர். நீண்ட அனுபவம் கொண்ட அவர் உத்தரப்பிரதேசத்தின் முகத்தையும் மாற்றிக் காட்டுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.