Last Updated : 05 Jun, 2017 08:02 AM

 

Published : 05 Jun 2017 08:02 AM
Last Updated : 05 Jun 2017 08:02 AM

கடந்த 3 ஆண்டுகளில் மக்களவைக்கு 5 எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை

எந்த விவாதத்திலும் பங்கேற்காத சத்ருகன் சின்ஹா, நடிகை மூன்மூன் சென்

கடந்த 3 ஆண்டுகளில் மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே 100 சதவீதம் வருகை புரிந்துள்ளனர். தருமபுரி எம்.பி.யான அன்புமணியின் வருகை 45 சதவீதமாக உள்ளது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலைவிட அக்கட்சித் தலைவரான அவரது தாயார் சோனியா வின் வருகை அதிகமாக உள்ளது.

545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் உத்தரபிரதேச மாநிலம் பாண்டா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி. பைரான் பிரசாத் மிஸ்ரா, 1,468 விவாதங்களில் பங்கேற்று, வருகைப் பதிவேட்டில் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்த இடங்களில் பிஜூ ஜனதா தள எம்.பி. குல்மானி சாமால் (ஜெகத்சிங்பூர் - ஒடிசா), பாஜக எம்.பி.க்களான கோபால் ஷெட்டி (வடக்கு மும்பை - மகாராஷ்டிரா), கிரித் சோலாங்கி (அகமதாபாத் மேற்கு - குஜராத்), ரமேஷ் சந்தர் கவுசிக் (சோனிபட் - ஹரியாணா) ஆகியோர் உள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகைப் பதிவு 59 சதவீதமாகவும், அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியின் வருகை 54 சதவீதமாகவும் உள்ளது. இதில் சோனியா 5 விவாதங்களிலும், ராகுல் 11 விவாதங்களிலும் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கேயின் வருகை முறையே 91 சதவீதம் மற்றும் 92 சதவீதமாகவும், அக்கட்சி எம்.பி.க்களான ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ் சதாவ் ஆகியோர் முறையே 80 சதவீதம் மற்றும் 81 சதவீதமாக வருகைப் பதிவு உள்ளது.

இதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாம் சிங் யாதவ் (79 சதவீதம்), தருமபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் (45 சதவீதம்), உத்தரபிரதேச முதல்வரும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் (72 சதவீதம்) ஆகியோரின் வருகை உள்ளது.

பாஜக எம்.பி. ஜியான் சிங் (மத்திய பிரதேசம்), திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், நடிகருமான தீபக் அதிகாரி (மேற்கு வங்கம்) ஆகியோர் முறையே 8 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என மிகவும் குறைந்த வருகை பதிவு எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளனர்.

நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் வருகைப் பதிவேடு 70 சதவீதமாக இருந்தாலும், அவர் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்றதில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், நடிகையுமான மூன்மூன் சென்னும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

எம்.பி.க்களில் 22 பேர், பாதி அல்லது அதற்கும் குறைவான முறையே மக்களவைக்கு வருகை புரிந்துள்ளனர்.

மக்களவையின் வருகைப் பதிவேட்டில் பிரதமர், சில அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கையெழுத்துப் போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x