துப்பாக்கியால் எப்போதும் தீர்வு கிடைக்காது: காஷ்மீர் இளைஞர்களுக்கு முதல்வர் மெகபூபா உருக்கமான வேண்டுகோள்

துப்பாக்கியால் எப்போதும் தீர்வு கிடைக்காது: காஷ்மீர் இளைஞர்களுக்கு முதல்வர் மெகபூபா உருக்கமான வேண்டுகோள்
Updated on
2 min read

காஷ்மீரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் உருக்கமாக உரையாற்றினார் முதல்வர் மெகபூபா.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மெகபூபா முதல்முறையாக பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

ஸ்திரத்தன்மை இல்லாத, பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் சிரியா அல்லது ஆப்கானிஸ்தான் போல, காஷ்மீர் மாறிவிட நாம் அனுமதிக்கக் கூடாது. காஷ்மீரில் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உரிய அவகாசம் கொடுத்தால்தான் அவற்றை செயல்படுத்த முடியும். அதுவரை மக்கள் யாரும், தவறான பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்காமல் இருக்கவேண்டியது அவசியம்.

காஷ்மீரில் என்கவுன்ட்டர் (புர்ஹான் வானி கொல்லப்பட்டது) நடப்பது இது முதல் முறையல்ல. அதற்காக, சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது. அவர்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல வேண்டியவர்கள். இங்கு நிலவும் பெரும் பிரச்சினைகள் சிறார் மூலம் தீர்க்கக் கூடியவை அல்ல. உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய இடங்களுக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோரும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

சில விரும்பத்தகாத சக்திகள், தங்களின் கொடிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு காஷ்மீர் இளைஞர்களை பாதுகாப்பு அரணாக பயன்படுத்தவும், அவர்களை தவறாக வழிநடத்தவும் செய்கின்றன. நான் பிரிவினைவாதிகளைப் பற்றி பேசப் போவதில்லை. ஆனால், கல்லெறிவதையே தொழிலாக நடத்தும் சில இடைத்தரகர்கள் குறித்துதான் பேசுகிறேன். இவர்கள் தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளில் பத்திரப்படுத்திவிட்டு, மற்ற இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்.

தற்போது காஷ்மீரில் நடக்கும் வன்முறை, மாநிலத்தில் கல்வியையும் காவு வாங்கிவிட்டது. ஐஐடி, ஐஐஎம், சட்டக் கல்லூரி, 5 மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வேண்டியவர்கள் குருடாகிவிட்டால், இவற்றை வைத்து என்ன செய்வது? இதற்கெல்லாம் யார் காரணம்?

துப்பாக்கியால் எப்போதும் பிரச்சினை தீராது. தேவைகளை பூர்த்தி செய்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல்வதுதான் ஒரே வழி. காஷ்மீர் விவகாரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசப்பட்டுள்ளது. 2008, 2010-ல் நிகழ்ந்தது போல அல்லாமல், இம்முறை காஷ்மீரின் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, அனைத்து தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என நம்புகிறோம்.

கீழே விழுந்த தேசியக் கொடி

ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மெகபூபா முப்தி, மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக கம்பத்தோடு கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து இழுத்தபோது, தேசியக் கொடி கீழே தரையில் வந்து விழுந்தது.

தர்மசங்கடமான சூழலில், 2 பாதுகாப்பு வீரர்கள் வந்து, முதல்வர் மெகபூபா கொடி வணக்கம் செலுத்தும் வரை, தேசியக் கொடியை தங்கள் கையில் ஏந்திப் பிடித்திருந்தனர்.

காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை அணிவகுப்பை பார்வையிடுவதற்காக, கொடி மேடையில் இருந்து மெகபூபா நகர்ந்ததும், ஸ்டேடியத்தில் இருந்து பாதுகாவலர்கள் விறுவிறுவென வந்து, தேசியக் கொடியை சரிசெய்து, கம்பத்தில் உச்சியில் பறக்கவிட்டனர்.

அசாதாரணமான இந்நிகழ்வு குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என, டிஜிபி ராஜேந்திர குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in