

கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அவர் சார்பில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விடுமுறை காலம் முடிந்து நீதிமன்றம் முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன் சிறப்பு அமர்வே இது குறித்து முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று விமானம் மூலம் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், "நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டதில் பல்வேறு உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இதனால் அவரை விடுவிக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் கர்ணன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், கர்ணன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சர்ச்சை பின்னணி:
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையி லான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீ ஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை.
கடந்த 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் அவர் பதுங்கியுள்ளதாக கொல்கத்தா போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர காவல் துறையினரின் உதவியை அவர்கள் நாடினர்.
மேற்கு வங்க காவல் துறையைச் சேர்ந்த 3 தனிப்படையினர் மற்றும் கோவை மாநகர, மாவட்ட காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். கர்ணனின் செல்போனின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டி யில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நேற்று மாலை போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.