ஜேட்லி கூட்டிய கூட்டத்திலிருந்து மே.வ.நிதியமைச்சர் கோபத்துடன் வெளிநடப்பு

ஜேட்லி கூட்டிய கூட்டத்திலிருந்து மே.வ.நிதியமைச்சர் கோபத்துடன் வெளிநடப்பு
Updated on
1 min read

நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூட்டியிருந்த ஜிஎஸ்டி குழு கூட்டத்திலிருந்து மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கோபத்துடன் வெளிநடப்பு செய்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டில் ‘நிதி அவசர நிலை’ பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ‘அச்சமூட்டக்கூடிய அரசியல் சூழல்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி கோபமாக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இரண்டு நாட்கள் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.

இதில் வரும் பிப்ரவரி மாதம் நிதியமைச்சகம் அளிக்கும் பட்ஜெட் பற்றிய விவாதமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அமித் மித்ரா, தேசத்துக்கு அன்று பிரதமர் மோடி உரையாற்றும் போது ஒரு ‘மினி பட்ஜெட்’ வாசித்து விட்டுச் சென்றார், அதன் பிறகே இந்த பட்ஜெட் கூட்டம் அர்த்தமற்றது என்று அருண் ஜேட்லியிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு, வேலையிழப்பு ஆகியவை பற்றியும் ஜேட்லியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

“எதார்த்த நிலைமைகள் என்னவென்பதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி உணர வேண்டும். நிதி அவசர நிலை மற்றும் அச்சம் ஏற்படுத்தும் ஒரு அரசியல் சூழல் நிலவுகிறது. சிறுதொழிற்கூடங்கள் மூடப்பட்டன. நாடு முழுதும் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட வேலையின்மை தலைவிரித்தாடுகிறது.

மேற்கு வங்கத்தின் தோல் தொழிற்சாலை சுத்தமாக வீழ்ச்சியடைந்து விட்டது. மகாராஷ்டிராவில் 12 லட்சம் விசைத்தறி தொழிற்கூடங்கள் மூடப்பட்டன. இதனால் இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையிழந்து பிஹார், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா என்று தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிகப்பு மிளகாய் தொழிற்கூடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது. நாக்பூரில் ஆரஞ்சு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது, அதைப்பற்றி பேச முடியவில்லை. ஏன் நம் மாண்பு மிகு நிதியமைச்சர் அருண் ஜேட்லி வரிவருவாய் குறித்து அளித்த தகவல்களை ஊடகங்களாலேயே கூட சரிபார்க்க முடியவில்லை. அருண் ஜேட்லி உண்மையை கேட்க வேண்டும் என்று விரும்பித்தான் இதையெல்லாம் கூறுகிறேன் ‘கனத்த இதயத்துடன் நான் இந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறுகிறேன்’.

இந்திய வரலாற்றில் பட்ஜெட் என்பது அர்த்தமற்றதாவது இப்போதுதான். ஏற்கெனவே பிரதமர் பட்ஜெட்டை அன்று தொலைக்காட்சி உரையில் அறிவித்து விட்டார். இது எங்கும் நடைபெறாதது. இதனைத் தெரிவித்த பின்பு நான் எதிர்ப்புடன் இங்கிருந்து வெளியேறுகிறேன்” என்று பேசினார் அமித் மித்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in