தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக முடங்கியது சீமாந்திரா

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக முடங்கியது சீமாந்திரா
Updated on
1 min read

தெலங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ஆந்திரம் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா அமைப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் 2-வது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதனால் கடலோர ஆந்திரம், ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால் நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நேர்று ஒரு நாள் மட்டும் தான் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சீமாந்திரம் மக்கள் தாங்களாகவே முன் வந்து இன்றும் முழு அடைப்பு நடத்துவதாக கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் பதற்றம்:

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

பேருந்துகள் நிறுத்தம்:

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் 2வது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், திருப்பதி உள்ளிட்ட ஆந்திரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in