ஆதார் இல்லாவிட்டால் அரசுப் பள்ளியில் மதிய உணவு இல்லை: உ.பி. புதிய உத்தரவு

ஆதார் இல்லாவிட்டால் அரசுப் பள்ளியில் மதிய உணவு இல்லை: உ.பி. புதிய உத்தரவு
Updated on
1 min read

ஆதார் அட்டை இல்லாவிட்டால் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் மோசமான உத்தரவு என்று பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் அட்டை பெறும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் மட்டுமே தொடர்ந்து பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் முடுக்கிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக, பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டுமானால் ஆதார் வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதனை தற்போது உத்தரப் பிரதேச மாநில அரசு அமலுக்குக் கொண்டுவந்துள்ளது.

உ.பி. அரசு நடவடிக்கை:

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளும் அரசு உத்தரவை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் சர்வேந்திர விக்ரம் பகதூர் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "மதிய உணவு திட்டத்தை அனுபவிக்க அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாது ஆதார் இல்லாமல் அரசின் பிற சலுகைகளையும் பெற முடியாது. எனவே அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றிருக்கிறார்களா என்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த அளவிலான மாணவர்களிடமே..

தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் ஆதார் அட்டை வைத்திருக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. மீரட் நகரில் உள்ள 1561 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்களில் 29,000 மாணவர்களிடம் மட்டுமே ஆதார் அட்டை உள்ளது. இது 17%-க்கும் குறைவானது.

தவிப்பில் பள்ளிகள்..

உ.பி.யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் அரசு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் பள்ளி நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் ஆதார் விவரத்தைப் பெற்று அரசிடம் சமர்ப்பிப்பது என்பது உடனடியாக முடியாத காரியம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in