

கர்நாடக மாநில நர்சிங் கல்லூரி யில் தலித் மாணவியின் வாயில் பினாயிலை ஊற்றிய 5 மாணவிகள் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி (19). சிறுவயதிலே தந்தையை இழந்த இவர் தாயின் அரவணைப்பில் பள்ளிப் படிப்பை முடித்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் ஹூமர் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தார். அப்போது அக்கல்லூரியை சேர்ந்த மூத்த மாணவிகள் சிலர் அஸ்வதியை தொடர்ந்து ராகிங் செய்தனர். இது தொடர்பாக அஸ்வதி பலமுறை தனது தாயி டமும் கல்லூரி தாளாளரிடமும் முறையிட்டுள்ளார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதம் 9-ம் தேதி இரவு மூத்த மாணவிகள் 5 பேர் மீண்டும் அஸ்வதியை ராகிங் செய்தனர். மேலும் அஸ்வதியை கழிவறை சுத்தம் செய்யும் பினாயிலை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்வதியை தாக்கி, அவரது வாயில் பினாயிலை ஊற்றியுள்ளனர். இதனால் உணவு குடல் வெந்த நிலையில் குல்பர்கா அரசு மருத்துவமனையில் அஸ்வதி அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டபோதும் அஸ்வதியின் உடல் நிலை தேறாததால் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அஸ்வதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டளருமான முகமது ஷபி அண்மையில் அஸ்வதியை சந்தித்து விபரங் களை கேட்டறிந்தார். இதையடுத்து தலித் மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தார்.
இது தொடர்பாக அஸ்வதியின் வழக்கறிஞர் முகமது ஷபி, `தி இந்து'விடம் கூறியதாவது:
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அஸ்வதி தலித் சமூகத்தை சேர்ந்தவர். 3 லட்ச ரூபாய் வங்கியில் கடன் வாங்கி, முதல் தலைமுறையாக கல்லூரியில் காலடி வைத்தார். கர்நாடக நர்ஸிங் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து, சில மாணவி கள் அவரை ராகிங் செய்துள்ளனர். சில மாணவிகள் அஸ்வதியை சாதி பெயர்ச் சொல்லி திட்டி இருக்கின்றனர்.
இது தொடர்பாக அஸ்வதி தனது தாயிடமும் மாமா பாஸ்கரனிடம் பலமுறை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து பாஸ்கரன் கடந்த ஏப்ரல் மாதம் சாதிக்கொடுமை தொடர்பாக விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்த கொடுமை தொடர்பாக கடந்த மே 13-ம் தேதி குல்பர்கா போலீஸாரிடம் புகார் அளித்த போது வழக்கு ஏற்கப்படவில்லை. ஏனென்றால் அஸ்வதி படித்த அல் ஹூமர் நர்சிங் கல்லூரியானது அப்போதைய கர்நாடக அமைச்சர் கமருல் இஸ்லாமுக்கு சொந்தமானது. எனவே போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியதை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரிக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோழிக்கோடு போலீஸார் அஸ்வதியை கொடுமைப்படுத்திய மூத்த மாணவிகள் 5 பேர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் 2 மாணவிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோழிக்கோடு போலீஸார், குல்பர்கா போலீஸா ருடன் இணைந்து அல்ஹூமர் கல்லூரி நிர்வாகத்தினரிடமும், ராகிங்கில் ஈடுபட்ட மாணவிகள் சிலரிடமும் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அஸ்வதி வாயில் பினாயில் ஊற்றியதை மாணவிகள் ஒப்புக்கொண்டதால் விரைவில் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.