Published : 20 Oct 2014 05:03 PM
Last Updated : 20 Oct 2014 05:03 PM

மகாராஷ்டிரம்: பாஜக உயர்மட்ட கூட்டத்தில் ராஜ்நாத் பங்கேற்கவில்லை

மும்பையில் இன்று நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பங்கேற்க மாட்டார் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.

மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனாவுக்கு 63, தேசியவாத காங்கிரஸுக்கு 41, காங்கிரஸுக்கு 42 இடங்கள் கிடைத்துள்ளன. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோரிடம் கட்சி மேலிடம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில், ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்நாத் சிங் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்தார்.

இதனையடுத்து, புதிய மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி மட்டும் இன்று நடைபெறும், பாஜக சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் கட்சியின் மூத்த தலைவர் வினோத் டாவ்டே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x