

தீவிரவாத குழுவுக்கு மூளையாக செயல்பட்டதாக, இந்திய விமானப் படை முன்னாள் ஊழியரை உ.பி. போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முகம்மது கவுஸ்கான் என்ற இந்நபர் உ.பி.யின் கான்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். இவருடன் அசார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து உ.பி.யின் கூடுதல் டிஜிபி தல்ஜித் சவுத்ரி கூறும்போது, “முகம்மது கவுஸ்கான் தொழில் நுட்பம் பயின்றவர். கான்பூரில் புதன் கிழமை என்கவுன்டரில் கொல்லப் பட்ட சைஃபுல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுவுக்கு மூளையாக செயல்பட்டவர். இக்குழுவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்களில் அசார் முக்கிய நபராவார்” என்றார்.
விமானப் படையில் முகம்மது கவுஸ்கான் எந்தப் பிரிவில் எந்த காலகட்டத்தில் பணியாற்றினார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
அண்டை மாநிலமான ம.பி.யில் போபால் உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக உ.பி. போலீஸார் 3 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். நேற்று இருவர் கைது செய்யப்பட்டதால் இந்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
போபால் உஜ்ஜைன் குண்டுவெடிப்பில் ம.பி. போலீஸாரும் சிலரை கைது செய்துள்ளனர்.