மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த பரிசீலனை: மொய்லி தகவல்

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த பரிசீலனை: மொய்லி தகவல்
Updated on
1 min read

வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஞ்சய் நிரூபம், பி.சி.சாக்கோ, மகாபால் மிஷ்ரா ஆகியோர் வீரப்ப மொய்லி சந்தித்தனர். அப்போது வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டு 12 ஆக உயர்த்த வேண்டுமென்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

அது தொடர்பாக மொய்லி கூறும்போது, "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடனும் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த விஷயம் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவுக்கும் எடுத்துச் செல்லப்படும்" என்றார்.

முன்னதாக கடந்த வாரம் இது தொடர்பாக பேசிய வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அளித்த நெருக்குதலை அடுத்து, இப்போது சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.

இப்போது ஆண்டு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் மானிய விலை கேஸ் சிலிண்டர்கள் ஓராண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் 2013 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in