

குஜராத் மாநிலத்தின் புதிய முதல் வராக விஜய் ருபானி நேற்று பதவி யேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக நிதின் படேலும், 24 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் விலகியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமான மாநில பாஜக தலைவர் விஜய் ருபானி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்து ருபானி ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்.
இதைத் தொடர்ந்து காந்திநகரில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. அப்போது மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக நிதின் படேலும், 8 கேபினட் அமைச்சர்களும், 16 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஓ.பி.கோலி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியாணா மாநில முதல்வர்களான தேவேந்திர பட்நாவிஸ், ரகுவர் தாஸ், மனோகர் லால் கட்டார் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ரஜினிபாய் படேல், வசுபென் திரிவேதி, சவுரவ் படேல், ரமண்லால் வோரா, கோவிந்த் படேல் உள்ளிட்ட 9 பேர் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் ஆனந்திபென் படேலுக்கு நெருக்க மானவர்கள் என்பதால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குஜராத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய் ருபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘‘குஜராத்தின் வளர்ச்சி பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள விஜய் ருபானி, நிதின்பாய் படேல் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘‘குஜராத் மக்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக அயராது உழைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.