Published : 25 Oct 2013 05:43 PM
Last Updated : 25 Oct 2013 05:43 PM

சர்ச்சைக்குரிய ராகுல் பேச்சு: தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் அணுகியதாக, மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.

இந்தத் தகவலை உளவுத் துறை அதிகாரி ஒருவர், தன்னிடம் கூறியதாக ராகுல் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மக்கள் மத்தியில் மதவெறியை பாஜக தூண்டி வருவதாக, ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் சீக்கியர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் அவர் பேசினார்.

'மதவெறியை பரப்பி வரும் பாஜகவின் வெறுப்பு கக்கும் அரசியல் பேச்சுகளால் நாட்டின் ஒற்றுமைக்கே பாதிப்பு ஏற்படுகிறது. எனது தந்தை ராஜீவ காந்தி, எனது பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் கொல்லப்பட்டது போல நானும் கொலை செய்யப்பட்டு விடுவேனோ என்கிற பயம் வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் வகுப்புக் கலவரம் மூண்ட முஸாபர்நகர் மாவட்டத்துக்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற அண்மையில் நான் சென்றேன். இந்துக்களையும் முஸ்லிம்களையும் சந்தித்தேன்.

அவர்கள் விவரித்த வார்த்தைகளில் எனது குடும்பக் கதையைத்தான் பார்க்க முடிகிறது. பாஜகவினரின் அரசியலை வெறுக்கிறேன். குஜராத்தில் பாஜக என்ன செய்தது என்பது தெரியும். முசாபர்நகரை வன்முறைக் களமாக அவர்கள் மாற்றப் போகிறார்கள். நீங்களும் நாங்களும் தீயை அணைக்க வேண்டிவருகிறது. அவர்கள் கையாளும் அரசியல், மக்களின் கோபத்தையும் வேதனையையும் கிளறிவிடுகிறது. வன்முறையில் விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகின்றன' என்று ராகுல் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, தேர்தல் ஆணையத்திடம் பாஜக இன்று புகார் அளித்தது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி பேசிய ராகுலுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூகத்தினர், மதத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக ராகுல் பேசியதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x