

போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் (55) மற்றும் ஓய்வுபெற்ற 3 அரசு ஊழியர்கள் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தண்டனை பற்றிய வாதம் இன்று நடைபெறுகிறது.
சோட்டா ராஜன், மோகன் குமார் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றதாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விவகாரத் தில் இவருக்கு உதவியதாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான ஜெய தத்தாத்ரே ரஹதே, தீபக் நட்வர்லால் ஷா மற்றும் லலிதா லட்சுமணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த மார்ச் 28-ம் தேதி முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சோட்டா ராஜன் உட்பட 4 பேரும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீரேந்திர குமார் கோயல் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி களுக்கான தண்டனை பற்றிய வாதம் இன்று நடைபெற உள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் 420, 471, 468, 467, 419 120பி மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் 12 ஆகிய பிரிவுகளின் கீழ் 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து, ஜாமீனில் இருந்த 3 ஓய்வு பெற்ற அதிகாரிகளும் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சோட்டா ராஜன் ஏற்கெனவே டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி யாக இருந்தவர் சோட்டா ராஜன். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உட்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் 27 ஆண்டுகளாக வெளி நாடுகளில் தலைமறைவாக இருந்த ராஜனை, இன்டர்போல் போலீஸார் கடந்த 2015-ல் இந்தோ னேசியாவில் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.