3 ஆண்டுகால ஆட்சியில் விளம்பரங்களுக்கு பாஜக செலவிட்டது எவ்வளவு? ஆய்வு தேவை: சிவசேனா காட்டம்

3 ஆண்டுகால ஆட்சியில் விளம்பரங்களுக்கு பாஜக செலவிட்டது எவ்வளவு? ஆய்வு தேவை: சிவசேனா காட்டம்
Updated on
1 min read

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 3 ஆண்டு கால தேசிய ஜனநாயக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி, குழப்பமும் தடுமாற்றமும் நிரம்பிய ஆட்சி என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளேட்டில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டு மக்கள் தற்போது வேதனையில் உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எல்லையில் வீரர்கள் உயிர்த் தியாகம் செய்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் 3 ஆண்டு கால ஆட்சியை சிலர் (பாஜகவினர்) கொண்டாட விரும்பினால், இப்பிரச்சினைகளை அவர்கள் பொருட்டாக கருதவில்லை என்றே அர்த்தம்.

நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கோடிக்கணக்கான பணம் அரசு கஜானாவில் இருந்து செலவிடப்படும். தற்போதைய அரசு வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட்டது எவ்வளவு, விளம்பரங்களுக்கு செலவிட்டது எவ்வளவு என்று ஆய்வு செய்வது அவசியம்.

தூய்மை இந்தியா திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான கோடி செலவிடப்பட்டது. நாடு சுத்தமாக உள்ளதா? கங்கை நதியை சுத்தப்படுத்த அதிக செலவு பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கங்கை சுத்தமாக மாறிவிட்டதா அல்லது அரசிடம் பணம் இல்லையா?

நல்ல நாட்கள் மீண்டும் வரும் என்றும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்து என்டிஏ ஆட்சிக்கு வந்தது. ஆனால் அப்படி எதுவும் இன்றுவரை நிகழவில்லை.

இதற்கு மாறாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் பரிதவிக்க நேரிட்டது. இதன்மூலம் ஊழல், கறுப்புப் பணம், விலைவாயு உயர்வு போன்ற பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதாக பாஜக கூறியது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒவ்வொரு நாளும் நமது வீரரகள் கொல்லப்படுகின்றனர். மறுபுறம் நக்ஸலைட்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றனர்.

வெற்று எச்சரிக்கை விடுக்கவா மோடி அரசுக்கு ஆட்சி அதிகாரம் தரப்பட்டது? என்டிஏ ஆட்சியில் தற்போது பெரும் குழுப்பமும் தடுமாற்றமும் நிறைந்து காணப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் வளர்ந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. பங்குச் சந்தையில் எழுச்சி காணப்படும் வேளையில் விவசாயிகளின் வாழ்க்கை அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. துவரம் பருப்பு மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அவற்றை அழிக்கும் நிலை உள்ளது.

என்டிஏ வெற்றியை 3 ஆண்டுகளுக்கு முன் நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். ஆனால் இன்று விவசாயிகள், ராணுவ வீரர்கள், மக்களின் நிலையை காணும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in