

உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அளிக்கும் யோசனைகளை செயல்படுத்தத் தயார் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாtர்.
அவர் மேலும் கூறியதாவது: “பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறும் யோசனைகளை ஏற்று செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார்.
அரசியல் ஆதாயம் பெறுவதற்காகத்தான் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ராகுல் பேசினாரா என்று கேட்டபோது, “அது போன்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை நான் தெரிவிக்க மாட்டேன். நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உங்களுக்குத்தான் அதைப்பற்றித் தெரியும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, அவர்களின் மறு வாழ்வுக்காக மாநில அரசு ரூ. 5 லட்சத்தை அளித்துள்ளது. அவர்களின் வீடுகள் எரிந்து சேதமடைந்து விட்டதாலும், உறவினர்கள் உயிரிழந்து விட்டதா லும் நிவாரண முகாம்களை விட்டு வெளியேற விரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளனர்” என்றார். முன்னதாக போலியா சொட்டு மருந்து இடும் பணியை வெற்றிகரமாக மாநில அரசு மேற்கொண்டதற்கான பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தில் ஒரு அரசியல் வியாதி பரவி வருகிறது. அதைத் தடுக்க வேண்டும். மதவாத சக்திகளை வளர விடாமல் தடுப்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது” என்றார்.