

உத்தரப் பிரதேசத்தில் 5-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 168 பேர் கோடீஸ்வரர்கள், மேலும் 117 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
நாளை நடைபெற உள்ள 5-ம் கட்ட தேர்தலில், 220 சுயேச்சைகள் உட்பட 75 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 617 பேர் (43 பெண்கள்) போட்டியிடுகின்றனர். இதில் 612 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கமும் உ.பி. தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து ஆய்வு செய்தது.
இதில் 168 (27%) பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக கூறியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 43 பேர் பகுஜன் சமாஜ், 38 பேர் பாஜக, 32 பேர் சமாஜ்வாதி, 7 பேர் காங்கிரஸ், 9 பேர் ஆர்எல்டி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 14 பேர் சுயேச்சைகள் ஆவர்.
மேலும் தங்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 117 பேர் தெரிவித்துள்ளனர். இதில் 96 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
இதுதவிர 156 பேர் பான் எண் விவரங்களை தரவில்லை. 365 பேர் வருமான வரி விவரங்களை தெரிவிக்கவில்லை. 266 பேர் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 285 பேர் பட்டதாரிகள். 38 பேருக்கு எழுத படிக்க தெரியும், 9 பேருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.