

ஆந்திர சட்டசபையில் தெலங்கானா மசோதா தொடர்பாக விவாதம் நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 15 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு வகை செய்யும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா குறித்து சட்டசபையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலையில் அவை கூடியதும், மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு முன்பு மாநிலத்தைப் பிரிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஜெகன் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வது தொடர்பான தீர்மானத்தை சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் எஸ்.சைலஜாநாத் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் என். மனோகர் அறிவித்தார்.
இதையடுத்து, சபாநாயகர் உத்தரவின் பேரில் ஜெகன் கட்சியைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 15 எம்எல்ஏக்களை சட்டசபை பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் விஜயம்மா வெளிநடப்பு செய்தார்.
சட்டசபையிலிருந்து வெளியேற்றப் பட்ட எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.