

ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் 26 வார சிசுவைக் கலைக்க அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது பெண் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என்னுடைய வயிற்றில் வளரும் சிசுவுக்கு உடல், மனநலக் குறைபாடு (டவுன் சிண்ட்ரோம்) இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதனால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தக் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த கேஇஎம் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி உத்தரவிட்டது. கர்ப்பிணியை பரிசோதித்த இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், “உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறிவுத் திறன் குறைவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், நமது வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது. மேலும் இதனால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. எனவே கருவைக் கலைக்க அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளனர்.