

மக்களவைத் தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மாற்று அணியை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:
மூன்றாவது அணியைப் பற்றி இப்போது யாரும் பேசவில்லை. எனினும் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணியை உருவாக்க மார்க்சிஸ்ட் முயற்சி செய்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அந்த அணிக்கு வடிவம் கொடுக்கப்படும். அநேகமாக தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாற்று அணி அமையக்கூடும்.
இருப்பினும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து சில கட்சிகளுடன் இப்போதே ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன்படி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கும் பிப்ரவரி 5-ம் தேதி ஒத்த கருத்துடைய சில கட்சிகள் தங்களது பொதுவான கொள்கை திட்டத்தை அறிவிக்க உள்ளன.
அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகள் அடங்கிய மாற்று அணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒட்டுமொத்தமாக 10 கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம்பெறக்கூடும். அதற்கு மேல் ஒன்றிரண்டு கட்சிகளும் சேரலாம்.
காங்கிரஸ், பாஜகவின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை சற்று பெரிதுபடுத்தி பேசுகிறார். இருகட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய மாற்றம் இல்லை. எங்களது புதிய கூட்டணி மக்களிடம் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியை தவிர வேறு எங்கும் கால் ஊன்ற முடியாது. அந்தக் கட்சி இடதுசாரி கட்சிகளுக்கு மாற்று சக்தி என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் இடது சாரிகளுக்கு மாற்று சக்தியாக முடியாது என்றார்.