

ஏ,எஃப்.டி ஆலையை திறக்கக் கோரி டிசம்பர் 5-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று புதுச்சேரி தி.மு.க அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது: ஏ.எஃப்.டி பஞ்சாலையை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நிதி சுமையை காரணம் காட்டி என்.ஆர். காங்கிரஸ் அரசு மூடியுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடக்கும் அரசியல் விளையாட்டில் தொழிலாளர் வாழ்க்கை பாதிக்கப்படுவதை கண்டித்தும், ஏ.எஃப்.டி ஆலையை உடனடியாக திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 5-ம் தேதி தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும். இந்த உண்ணாவிரதம் சுதேசி காட்டன் மில் அருகே காலை 8 மணிக்கு தொடங்கும்.
ஏ.எஃப்.டி ஆலையை சீரமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தருவேன் என தேர்தல் வாக்குறுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தர வேண்டும்.
புதுச்சேரி ஆலையை சீரமைக்க ரூ. 500 கோடி நிதி கேட்டு மத்திய அரசுக்கு அமைச்சரவை ஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கோப்பின் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் நாராயணசாமியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கண்ணனும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஊதிய நிலுவைத் தொகை தரும்வரை அந்தக் குடும்பங்களை வறுமையில் இருந்து காக்க அமுதசுரபி மூலம் அரிசி, மளிகை பொருள்கள் தர வேண்டும்.
ஆலை மீண்டும் திறக்கப்படும் வரை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். 60 வயது பூர்த்தியாகி பணிமூப்பில் சென்ற 455 தொழிலாளர்களுக்கு பணிகொடையை உடனடியாக தர வேண்டும். லே-ஆப் திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.