புயல் சேதத்துக்கு ரூ.2000 கோடி நிவாரணம்: சந்திர பாபு கோரிக்கை
ஹுத் ஹுத் புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக புயலால் ஏற்பட்ட சேதம் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் மாநில தலைமைச் செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, புயல் நிலவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மத்திய அமைச்சரவைச் செயலாளரும் தன்னை அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
விரைவில் விசாகப்பட்டினத்துக்குச் சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும், தேவைப்பட்டால் அங்கு மேலும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொலைத் தொடர்பு சேவைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அதிகாரிகளை கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். தங்கள் பகுதியில் புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை அரசுக்கு அனுப்பிவைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி உறுதி
ஹுத்ஹுத் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஹுத்ஹுத் புயல் ஆந்திரப் பிரதேச மாநில எல்லையை நேற்று மதியம் கடந்ததும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர், ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி கூறினார். அப்போது மோடியிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகளில் மத்திய அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாகவும், விரைவில் தான் விசாகப்பட்டினத்துக்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சரவைச் செயலாளர், உள்துறை செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
