

பாதியில் நின்றுபோன பள்ளிப் படிப்பை தொடர விரும்பிய பாகிஸ்தான் சிறுமிக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மதுவுக்கு 16 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் தனது தாய், உடன் பிறந்தோர் மற்றும் சில உறவினர்களுடன் இந்தியா வந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்த அவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. தந்தையை இழந்து வாடி வந்த அக்குடும்பத்தினர் மத நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்தனர்.
இதனையடுத்து அவர்கள் இந்தியா திரும்பினர். ஆனால் மிகுந்த நெருக்கடிக்கு இடையே அவர்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதால் அவர்களால் முக்கிய ஆவணங்களை எடுத்துவர முடியவில்லை. டெல்லி சஞ்சய் காலனியில் குடியேறினர்.
இந்நிலையில் இந்தியா வந்த பின்னர் மதுவுக்கு வேறு பிரச்சினை ஏற்பட்டது. முக்கிய ஆவணங்களை பாகிஸ்தானிலேயே விட்டு வந்ததால் அவரால் இங்கு பள்ளி படிப்பை தொடர முடியவில்லை.
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் கடந்த 7-ம் தேதி (செப். 7) வெளியான செய்தியில் டெல்லி அரசுப் பள்ளியில் சேர முடியாமல் பாகிஸ்தானில் இருந்து வந்து அகதியாக தஞ்சம் புகுந்துள்ள சிறுமி மது தவித்து வருவதாக செய்தி வெளியானது. சிறுமி மது அசோக் அகர்வால் என்ற தொண்டு நிறுவன ஊழியரை அணுகியதும் அவர் மூலமாக முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உதவி கோரி கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மது, உங்களைப் பற்றிய செய்திகளை படித்தேன். இன்று மாலை 7 மணியளவில் என் வீட்டில் என்னை சந்திக்கவும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிலளித்த தொண்டு நிறுவனத்தின் அசோக் அகர்வால், "மதுவின் பிரச்சினையை தீர்க்க முயன்றமைக்கு மிக்க நன்றி. அவருக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் கிடைக்க உதவுங்கள்" எனக் கோரியிருந்தார்.
பாகிஸ்தானில் எதிர்கொண்ட பாகுபாடு:
சிறுமி மது பாகிஸ்தானில் சந்தித்த சவால் குறித்து அவரது உறவினர் ஜேவார் கூறும்போது "பாகிஸ்தானில் மது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒவ்வொரு நாளும் பள்ளியில் அவர் எண்ணற்ற துயரங்களை சந்தித்தார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தண்ணீர் குடிக்க மற்ற மாணவிகள் பயன்படுத்தும் டம்பளரை பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. மேலும் ஆசிரியர்களும் பாரபட்சமாகவே நடந்து கொண்டனர்" என்றார்.