

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சிறுசிறு அசம்பாவித சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஷாம்லி, முசாபர்நகர், மீரட், காசியாபாத், ஆக்ரா உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்குட்பட்ட 73 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 77 பெண்கள் உட்பட மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நேற்றைய தேர்தலில் மொத்தம் 26,822 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. 1.17 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 2.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 1,508 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும், சமாஜ்வாதி 51, காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் போட்டி யிடுகின்றன. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள போதிலும் சில தொகுதிகளில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். அஜித் சிங்கின் ஆர்எல்டி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேர்தலை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, 2013-ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 887-ல் 600 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப் பட்டது. இங்கு நிலைமையை கண்காணிப் பதற்காக வீடியோ கேமராக்கள் பொருத்தப் பட்டன.
மேலும் முசாபர்நகர் மற்றும் இதனை ஒட்டிய ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் துணை ராணுவப் படை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
எனினும், பாக்பட் நகரில் பாகு காலனியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, பாக்பட் மாவட்டம் லூயான் கிராமத்தில் தலித் மக்களை வாக்களிக்க விடாமல் ஆர்எல்டி கட்சியினர் தடுத்துள்ளனர். இதனால் மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸார் தலையிட்டு மோதலை தடுத்தனர். இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு மாநில தலைமை தேர்தல் அதிகாரி டி.வெங்கடேஷ் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “சிறுசிறு மோதல்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 2012 தேர்தலைவிட 3 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக எட்டாவில் 73 சதவீதமும் குறைந்தபட்சமாக காசியாபாத்தில் 57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் (நொய்டா), மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பிரதீப் மாத்தூர் (மதுரா), பாஜக எம்பி ஹுகும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் (கைரானா), சர்ச்சைக்குரிய பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ராணா ஆகியோர் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர, பாஜக மாநில முன்னாள் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் (மீரட்), சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகன் ராகுல் சிங் (சிக்கந்தராபாத்), ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் (அட்ரவுலி) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில், உ.பி.யில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பாஜக களம் காண்கிறது. அதேநேரம், பாஜகவின் கனவை தகர்ப்பதற்காக, இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.