

நிரந்தர கணக்கு எண் (பான்) பெறுவதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியதற்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், வரி ஏய்ப்பு நடைபெறுவதைத் தடுக்கவே மத்திய அரசு புதுப்புது சட்டங்களை இயற்றுவதாக கருத்து தெரிவித்துள்ளது.
பான் எண் பெறுவதற்கும் வருமான வரி தாக்கல் செய்வதற் கும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி சட்டத்தில், நிதி சட்டம் 2017-ன் மூலம் 139 ஏஏ பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து ராமன் மகசேசே விருது பெற்ற பிஸ்வதா வில்சன், கேரள முன்னாள் அமைச்சர் பினோய் விஸ்வம் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி எஸ்.ஜி.வொம்பட்கர் ஆகியோர் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறும்போது, “ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 10 லட்சம் போலி பான் கார்டுகள் உருவாகின்றன. மேலும் வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவே ஆதார் எண் கட்டாய மாக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “வரி ஏய்ப்பு நடைபெறும்போது அதைத் தடுக்கும் வகையில் புதுப்புது சட்டங்களை இயற்ற மத்திய அரசு முயற்சிக்கும். நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டு வரி ஏய்ப்பு செய்வது அவமானமாக உள்ளது” என்றனர்.