ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து கோரிக்கைகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலத்தைப் பிரிக்கும் போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலின் போது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக.வும் உறுதி அளித்தது. அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றுள்ளது. இக்கட்சியின் சார்பில் மோடி அமைச்சரவையில் 2 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in