பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாபா ராம்தேவ்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாபா ராம்தேவ்
Updated on
1 min read

‘‘சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கு இதுவே சரியான நேரம். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு வாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் கொடியை எரித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இதுவே சரியான நேரம். இதுகுறித்து மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

நம்முடைய பெருமைக்குரிய நாட்டில் காஷ்மீரின் ஒரு பகுதியை கோழைத்தனமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. அதை நாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க கூடாது. நம்முடைய குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில்தான் பார்த்துக் வருகின்றனர். ‘ஒரு நாள் காஷ்மீரை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூறுவதற்கு துணிச்சல் உள்ளது.

எனவே, நம்மிடம் இருந்து ஆக்கிரமித்து வைத்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்க மோடி தீவிர பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அந்தப் பகுதியை மீட்பதற்கு இதுவே சரியான நேரம். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி செய்யும் தீவிரவாத இயக்கங்களை அழிக்க பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in