

இந்தியாவுடன் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தின்படி, கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் பற்றி நாங்கள் அளித்த பட்டியலை விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே தர வேண்டும். பகிரங்க மாக வெளியிடக் கூடாது என்று ஸ்விட்சர்லாந்து அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா வில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி யில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக் கப்படும் 627 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. அந்த பட்டியலை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்பிவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த மூன்று தொழிலதிபர்களின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், அதே போன்று மற்றவர் களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படாத நிலையில், அவர்களது பெயர்களை வெளி யிடுவது, வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாக ஆகிவிடுமா என்பது குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நிதியமைச்சக செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பகிரங்கமாக வெளியிடக்கூடாது.
அந்த தகவல்களை விசாரணை நடத்தும் அமைப்புகள் (நீதிமன்றம் அல்லது அரசின் நிர்வாகத் துறை) அல்லது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கும் அமைப்புகள் ஆகியவற்றிற்குத்தான் தர வேண்டும்.
நீதிமன்றத்தில் நடைபெறும் வரி தொடர்பான வழக்குகளில், இந்த இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் தேவைப்படுகிறது என்றால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த விவரங்களை விசாரணை அமைப்புகள் தரலாம்.
அவை அல்லாத வழக்குகளில் இத்தகவலை நீதிமன்றத்துக்கு தரக் கூடாது” என்று தெரிவித் துள்ளார்.