

பிகார் தலைநகர் பாட்னாவின் இன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முங்கர் பயணத்தை ரத்து செய்த அவர், இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்புகளை அடுத்து சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயர் ஏ.கே.சின்ஹா, காவல்துறை தலைவர் அபிஆனந்த், உள்துறை முதன்மைச் செயலர் அமீர் சுமானி ஆகியோரை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
முங்கர் பகுதிக்கு செல்வதற்காக விமான நிலையம் செல்ல அவரது வீட்டில் கார் புறப்படத் தயாராக இருந்தது. குண்டு வெடிப்பு செய்தி கேட்டதுமே தனது பயணத்தை நிதீஷ் குமார் ரத்த செய்ததாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு குண்டுவெடிப்பு பற்றிய தகவலை தெரியப்படுத்தினார்.
நாளந்தா மாவட்டத்தில் 2 நாள் நடைபெறும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பற்காக முங்கர் வரை விமானத்தில் செனறு அங்கிருந்து ராஜ்கீர் செல்ல திட்டமிட்டிருந்தார் நிதீஷ் குமார்.
முங்கரில் நடக்கும் சர்வதேத யோகா மாநாட்டில் பங்கேற்பதையும் ரத்து செய்தார் முதல்வர் என முங்கர் மாவட்ட ஆட்சியர் என்.கே.சிங் தெரிவித்தார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சனிக்கிழமை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 66 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனிடையே, பாட்னா தொடர் குண்டுவெடிப்பு, உளவுத் துறையின் ஒட்டுமொத்த தோல்வியையே காட்டுகிறது என பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.