

குரங்குகளுக்கென தனியாக 10 விலங்கியல் பூங்காக்களை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற இமாசலப் பிரதேச அரசின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நிரா கரித்துவிட்டது.
இமாசலப் பிரதேசத்தில் சாகுபடி செய்யப்படும் காய் கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குரங்குகள் பெரும் அளவில் சேதம் விளைவித்துவருகின்றன. இதனால், ஆண்டுக்கு ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அந்த மாநிலத்தில் இரண்டரை லட்சம் குரங்குகள் உள்ளன. குரங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, மாநில அரசு செயல்படுத்திய கருத்தடை திட்டம் போதிய பலன் அளிக்கவில்லை. குரங்குகளை சுட்டுக்கொல்ல மத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
எனவே, குரங்குகளை விளை நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் ரூ. 200 கோடி செலவில் 10 விலங்கியல் பூங்காக்களை அமைக்க இமாசலப் பிரதேச அரசு முடிவு செய்தது. குரங்குகளை பிடித்து இந்த பூங்காக்களில் விடுவதற்கும், பழ மரங்களை நட்டு வளர்த்து இயற்கை வனத்தை ஏற்படுத்தவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இமாசல அரசு அனுமதி கேட்டது.
ஆனால், மாநில அரசின் அந்த யோசனையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து தங்களின் யோசனையை மீண்டும் பரிசீலனை செய்யும்படி இமாசலப் பிரதேச அரசு கோரியுள்ளது.