

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் மேற்கொண்ட ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுப் பதிவு குறித்த உத்தரவு பிப்ரவரி 2-ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தது, மேலும் மாறன் சகோதரர்களின் ஜாமின் மனு மீதான உத்தரவும் இன்று பிறப்பிக்கப்படுவதாக இருந்தது, ஆனால் உத்தரவு இன்னும் தயாராகவில்லை என்ற காரணத்தினால் பிப்ரவரி 2-ம் தேதிக்கு தள்ளி வைத்ததாக அவர் தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மறுத்ததோடு ஜாமின் மனு செய்திருந்தனர்.
குற்றப்பதிவு குறித்து வாதம் புரிந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சென்னையில் உள்ள தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் என்பவருக்கு தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு மாற்றுமாறு வற்புறுத்தினார் என்று குற்றம் சுமத்தினார்.
ஆனால் இதனை தயாநிதி மாறன் கடுமையாக மறுத்தார்.
அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த நிதிமுறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள், கலாநிதி மாறன் மனைவி காவேரி, யும் சவுத் ஏஷியா எஃப்.எம். மற்றும் சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.