

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14-ம் தேதி முதல், காலவரையறை இல்லா போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் 9-வது நாளான நேற்று போராட்டக் குழுவினரை மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தனது அலுவலகத்தில் சந்தித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதற்கான ஏற்பாட்டை செய்தார்.
இந்த சந்திப்பில், தமிழகத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதி அளிக்கும்படி தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர். அப்போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத் திற்கு ரூ.1748.28 கோடி அளிக்க பரிந்துரைக்க இருப்பதாக ராதா மோகன் சிங் தெரிவித்தார். தமிழகத்தில் வறட்சியை பார்வை யிட வந்த மத்திய உயர்நிலைக் குழு சார்பில் இத்தொகை பரிந்துரைக்கப்பட உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணு கூறும்போது, “தமிழகத்தில் நிலவும் வறட்சியால் இதுவரை 400 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வறட்சி நிவாரணம் உடனே அளிக்கப் படவில்லை எனில் அது 4,000 ஆக உயரும் ஆபத்து உள்ளது என அமைச்சரிடம் கூறினோம். மத்தியக்குழு கேட்ட தகவல்களை தமிழக அரசு அளிக்க தாமதம் ஆனதால், வறட்சி நிவாரண நிதி குறித்த முடிவு எடுப்பதில் தாமதம் ஆனதாக அமைச்சர் தெரிவித்தார். வறட்சி நிவாரணமாக தமிழகம் ரூ.39,565 கோடி கேட்டுள்ளது. ஆனால் ரூ.1748.28 கோடி மட்டுமே பரிந்துரைக்கப்பட இருப்பதாக அமைச்சர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. எங்களுக்காக தமிழக அரசு கேட்ட தொகையை அளிக்காதவரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.
உயர்நிலைக்குழு இன்று ஒப்புதல்
வறட்சியை பார்வையிடுவதற் காக என்டிஆர்எப் (தேசிய பேரிடர் நிவாரண நிதியம்) தேசிய செயற்குழு தமிழகம் வந்திருந்தது. இக்குழுவிடம், விவசாய மானியம், குடிநீர் விநியோகம், கால்நடை, வனங்கள் பராமரிப்பு உட்பட 10 வகையான நிவாரணம் கோரப் பட்டது. இதில் விவசாயிகளின் வேலைவாய்ப்புக்கு ரூ.6,800 கோடி, கூட்டுறவு வங்கிகளின் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.280 கோடி ஆகியவை பேரிடர் நிவாரணத்தில் வராது என அத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. மற்ற எட்டு வகை நிவாரணங்களையும் கணக் கிட்டு 2,096.80 கோடி வழங்க அக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் இத்தொகையை ரூ.1,748.28 கோடியாக துணைக்குழு குறைத்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தொகைக்கு, இன்று (மார்ச் 23) கூடவிருக்கும் மத்திய அரசின் உயர்நிலைக்குழுவின் ஒப்புதல் பெறப்படும். பிறகு இந்த ஒப்புதல் மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நிதி இருப்பை பொறுத்து தமிழக அரசுக்கு நிவாரணத் தொகை விடு விக்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன், ஆந்திர அரசு கேட்ட நிவாரணத் தொகையும் பரிந்துரைக்கப்பட உள்ளது. ஆந்திர அரசு 7 வரை நிவாரணமாக ரூ.2,281.79 கோடி கேட்டது. இதற்கு ரூ.518.93 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வறட்சி நிவாரண நிதி ஏற்கெனவே அளிக்கப்பட்டு விட்டது.