

டெல்லியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவும் நிலையில், அங்கு ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம் தர மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில்: "ஆட்சி அமைப்பதற்கு எத்தனை நாள் அவகாசம் ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது என்ற தகவலை அளிக்குமாறு டெல்லி துணை நிலை ஆளுநரிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம் தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. அவகாசம் அளிப்பது ஜனநாயக நடவடிக்கை" என்றார்.
70 தொகுதிகளுக்கான டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றின. பாஜக பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்று கூறிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி முடிவு எடுக்க அவகாசம் கோரியுள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகளில் 16-ஐ ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு என காங்கிரஸின் உதவிக்கரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வரும் ஆம் ஆத்மி இறுதியாக மக்கள் கருத்தை கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தான் இன்று (வியாழக்கிழமை) ஷிண்டே, மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் அவகாசம் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அவகாசம் அளிப்பது ஜனநாயக நடவடிக்கை என்றும் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஷிண்டேவின் அறிவிப்பு, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டவில்லை என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.