

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.
அதாவது நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை இவர்கள் ஏற்படுத்தல் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதில் பயங்கரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதலைத் தொடரத் திட்டமில்லை. ஆனால் தேவைப்பட்டால் தீவிரவாத எழுச்சியை முறியடிக்க ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பிலும் பேசி எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதே எங்கள் நோக்கம். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதிகள் நடமாட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
காங்கிரஸ் பாராட்டு
இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். | விரிவாக வாசிக்க >>எல்லையில் தாக்குதல் வியூகம்: பிரதமர், ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் பாராட்டு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்:
துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.
அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள். பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன சொல்கிறது பாக். ராணுவம்?
எல்லையில் வியூகத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் பறைசாற்றிவரும் நிலையில், பாகிஸ்தான் தரப்போ அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. | முழு விவரம் >>இந்திய வியூகத் தாக்குதல்: என்ன சொல்கிறது பாக். ராணுவம்?
தாக்குதல் நடந்தது எப்படி?
காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் போது ராணுவ கமாண்டோக்கள் சுமார் 7 இடங்களில் தாக்குதல் மேற்கொண்டதாக உயர்மட்ட ராணுவ வட்டாரங்கள் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளது. | விரிவான தகவல்கள் >>எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு: இந்திய ராணுவ அதிரடியும் பின்னணியும்
மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் வரையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற்றுமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. | அதன் விவரம் >>பஞ்சாபில் பாக். எல்லையோர கிராம மக்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு
நெட்டிசன்கள் கருத்து:
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை, யூரி தாக்குதலில் பலியான வீரர்களுக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலியாகக் கருதும் இணையவாசிகள், இந்திய ராணுவத்தைப் பாராட்டி Indian Army, பதில் தாக்குதலுக்கு #SurgicalStrike மற்றும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்ததாகக் கூறி #ModiPunishesPak, ஆகிய ஹேஷ்டேகுகளை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இவையனைத்தும் ட்ரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தாக்குதல் நடைபெற்ற கட்டுப்பாட்டு எல்லைக் கோடான #Line of Control-ம் ட்ரெண்டாகி வருகிறது. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு நெட்டிசன் நோட்ஸில்... > >நெட்டிசன் நோட்ஸ்: - யூரி தியாகிகளும் ராணுவ பதிலடியும்!