

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த இன்ஜினீயர் கென் சித். இவர் அங்குள்ள பார்மன் கிறிஸ் டியன் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கென் சித்தின் குழந்தைக்கு பாகிஸ்தானில் சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை.
எனவே தனது குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க கென் சித் முடிவு செய்தார். ஆனால் இதில் அவர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். இதனால் விரக்தியடைந்த அவர், தனது ட்விட்டர் பதிவில், உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் என் குழந்தை ஏன் தவிக்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிப்பார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில் தனது குழந்தையின் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு கருணையுள்ளத்துடன் பதில் அளித்துள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எந்த குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது. உடன டியாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி மருத்துவ விசா பெற்றுக் கொள்ளுங்கள் என்று ட்விட்டர் மூலம் கென் சித்திடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள கென் சித், ‘‘எனது உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது மகனுக்கு நீங்கள் (சுஷ்மா) செய்யும் உதவிக்கு நன்றி. இந்திய அரசுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.