

விவசாயிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஹரியாணா அரசு சார்பில் சூரஜ்குண்ட் நகரில் இன்று நடந்த வேளாண் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ''2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த குறிக்கோளை சாத்தியமானதாக நாங்கள் மாற்றுவோம்.
இடுபொருட்கள் விலை உயர்வாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் விவசாயிகள் சவால்களை சந்தித்து வருகின்றனர். விவசாயம் லாபகரமாக இருக்காது என்று அச்சப்படத் தேவையில்லை. விவசாயிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
21-ம் நூற்றாண்டில் வேளாண் துறை மட்டுமே பிரகாசமாக துறையாக இருக்கும் என்று உலகம் முழுவதிலும் நம்புகின்றனர். தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விளைச்சல் அதிகரிப்பால் வேளாண் துறை முன்னேற்றம் அடையும்'' என்றார்.