

தென்னிந்தியாவிலேயே மின் பற்றாக்குறையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக கர்நாடகாவிலும், மூன்று மற்றும் நான்காவதாக முறையே கேரளா மற்றும் புதுவையிலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்தி ராவில் மின் தட்டுப்பாடு அறவே குறைந்துவிட்டது.
மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே 8 மணி நேரத்துக்கு அதிகமாக மின்வெட்டு இருந்து வருகிறது. மின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே இதற்கு காரணம் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய மின் தொடரமைப்புக் கழகம் வெளியிட்டுள்ள விவரத்தின்படி, பீக் அவர், எனப்படும் காலை ஏழு மணிக்கும் இரவு ஏழு மணிக்கும் தமிழகத்தில் 2,300 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், கர்நாடகாவில் 800 மெகாவாட்டும், கேரளாவில் 600 மெகாவாட்டும், புதுவையில் 10 மெகாவாட்டும் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், ஆந்திராவில் பெரும்பாலும் மின் தட்டுப்பாடு இல்லாமல், முழு அளவில் மின்சாரம் வினியோகிக் கப்படுகிறது.
இதுகுறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது: மின்தட்டுப்பாட்டைப் போக்க, ஆந்திர மாநில மின் வாரியம் தினமும் சுமார் 1.70 கோடி யூனிட் மின்சாரத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்குகிறது. ஆனால், தமிழகத்தில் மின் வாரிய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே தினமும் விலைக்கு வாங்கப்படுகிறது. அதனால் ஆந்திராவைவிட தமிழகத்தில் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. கர்நாடகம் 80 லட்சம் யூனிட்களும், கேரளம் 10.50 லட்சம் யூனிட்களும் வாங்கி நிலைமையை சமாளிக்கின்றன.
சனிக்கிழமை காலை நிலவரப் படி, தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள ஒன்பது மின் அலகுகளிலும் தமிழகத்தின் மூன்று மின் அலகுகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் 21.58 கோடி யூனிட் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. வெளிச்சந்தையில் 530 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது என்றனர்.