Last Updated : 06 Mar, 2017 05:19 PM

 

Published : 06 Mar 2017 05:19 PM
Last Updated : 06 Mar 2017 05:19 PM

வாரணாசியின் தீவிர பிரச்சாரத்தால் விமர்சனத்துக்குள்ளான மோடி

உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு மார்ச் 8-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தங்கி நடத்திய தீவிரப் பிரச்சாரம் விமர்சனத்துக்குள்ளானது.

2014-ல் நடத்த மக்களவை தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட மோடி ஒரே ஒரு பிரச்சாரக் கூட்டம் நடத்தினார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒரே நாளில் இருபெரும் பொதுக்கூட்டம் மற்றும் இரண்டு சாலைப் பிரச்சாரங்களையும் நடத்தி உள்ளார். இத்துடன், நேற்று வாரணாசியிலேயே தங்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. இது, பாஜகவின் எதிர்க்கட்சிகள் அன்றி அதன் தோழமைக் கட்சிகள் இடையேயும் விமர்சனத்துக்குள்ளானது.

பாஜகவின் தோழமைக் கட்சியும் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, பிரதமர் மோடியின் தீவிரப் பிரச்சாரத்தை கண்டிக்கும் வகையில் கருத்து கூறி உள்ளார். மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சருமான குஷ்வாஹா கடந்த இருதினங்களாக பேசிய மேடைகளில் இதை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இது குறித்து குஷ்வாஹா கூறுகையில், ''பிரதமர் நேரடியாகக் களம் இறங்கி இதுபோல் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது பிரதமர் பதவியை குறைத்து மதிப்பிட வாய்ப்பாகி விடும். எனவே, இதை பாஜக செய்திருக்கக் கூடாது'' எனத் தெரிவித்தார்.

குஷ்வாஹாவின் இந்த கருத்துக்களை பாஜக உடனடியாகக் கண்டித்தது. இவர் பிஹாரை சேர்ந்தவர் என்பதால் அம்மாநில பாஜக எம் எல் ஏக்களின் தலைவரான பிரேம்குமார், குஷ்வாஹாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதில், குஷவாஹா தன் எல்லையை மீறக் கூடாது எனவும், தீவிரப் பிரச்சாரங்களின் மூலம் பிரதமர் பொதுமக்களுடன் நேரடியாகக் கலக்க முயன்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தீவிரப் பிரச்சாரத்தை உ.பி. முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வாரணாசியின் அருகிலுள்ள சோன்பத்ராவின் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அதில் அகிலேஷ், ''பிரதமரின் சாலைப் பிரச்சாரத்தில் கூட்டம் சேராததால் அவர் மற்றொருமுறை அதை நடத்த வேண்டியதாகி விட்டது. சனிக்கிழமை நடத்தியதில் தோல்வியுற்றதால் மீண்டும் ஞாயிறு நடத்தினார். இனி அவர் அடுத்த மக்களவை தேர்தல் வரை இதுபோன்ற பிரச்சாரத்தை அடிக்கடி நடத்திக் கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால், நான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுடன் நடத்திய சாலைப் பிரச்சாரத்திற்கு இதுவரை எந்தக் கட்சிக்கும் வராத கூட்டம் இருந்தது'' எனத் தெரிவித்தார்.

இதேபோன்ற விமர்சனம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தன் பிரச்சாரத்தில் வைத்தார். அவர் பேசுகையில், ''அமெரிக்காவில் இந்தியர்கள் சுடப்படுகிறார்கள். அவர்களைக் காக்க வேண்டிய நம் நாட்டு பிரதமர் இங்கு வாரணாசியின் தெருக்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இது உ.பி. தேர்தலில் பாஜக தோல்வியுறுவதை காட்டுகிறது'' எனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வாரணாசியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. அன்று இரவு டெல்லி திரும்பியவர் மறுநாள் திரும்ப வந்து வாரணாசியிலேயே இரவு தங்கினார். இன்று நான்காவது நாளாக அவர் இறுதிகட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை உ.பி. தேர்தல் வரலாற்றில் இதுபோல் ஒரு பிரதமர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது இல்லை எனக் கருதப்படுகிறது. வாரணாசியின் 5 உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் உ.பி.யின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 8-ல் நடைபெறுகிறது. இதன் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x