

ஐ.பி.எல்., சூதாட்டப் புகார் குறித்து விசாரிக்க பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பிகார் கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக் குழு அமைக்க பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஐ.பி.எல்., முறைகேடுகளில், ஸ்ரீநிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பு உள்ளது என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்ற தகுதியற்றவர், எனவே பி.சி.சி.ஐ., தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பிகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இதனையடுத்து, ஸ்ரீநிவாசன் தலைவராக தேர்தெடுக்கப்பட்டாலும் அவர் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
கடந்த 29ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று, பிகார் கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், ஸ்ரீநிவாசனுக்கு நெருக்கடி வலுத்துள்ளது.