

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று கூடியவுடன் மக்களவையில் சபாநாயகர் மீரா குமாரும், மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரியும் இரங்கல் அறிக்கையை வாசித்தனர்.
ஹமீது அன்சாரி இரங்கல் குறிப்பில், மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் தேசப்பிதா, மகாத்மா காந்தியின் பாதையில் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்ட அவர் நிறவெறிக்கு எதிராகப் போராடினார், என்று புகழஞ்சலி செலுத்தினார்.
மண்டேலாவுக்கு 1990-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியதை சுட்டிக்காட்டிப் பேசிய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மண்டேலா மனித குளத்தின் தலைவர் என்றார்.
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், மண்டேலாவின் சுவடுகள் காலத்தால் அழிக்க முடியாதது. மன்னில் மக்கள் தோன்றி, மறைந்தாலும் மண்டேலா என்றும் வாழ்வார் என்றார்.