

காஷ்மீரில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இளம் ராணுவ அதிகாரி ஒருவர், தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், ஹர்மைன் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பயஸ் (23). ராணுவத்தின் ராஜ்புதானா ரைபில்ஸ் படைப்பிரிவில் அதிகாரி யாக (லெப்டினன்ட்) கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பணியாற்றி வந்தார். ஜம்மு மாவட்டம், அக்னூர் பகுதியில் நியமிக்கப்பட்டிருந்த அவர், நெருங்கிய உறவினர் திருமணத்தில் பங்கேற்க, விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் முகமூடி அணிந்த 2 தீவிரவாதிகள் அவரை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அவரது உடல் கிடந்தது. தலை, மார்பு மற்றும் வயிற்றில் குண்டு காயங்கள் இருந்தன. மிக அருகில் இருந்து தீவிரவாதிகள் அவரை கொன்றதாக தெரியவந்துள்ளது.
இதனால் உமர் பங்கேற்க விரும்பிய திருமண விழா, அவரது இறுதி ஊர்வல நிகழ்ச்சியாக மாறியது.
உமர் பயஸின் உடல் நேற்று மாலை முழு ராணுவ மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது கிராமத்தைச் சேர்ந்த ஏராளமா னோர் பங்கேற்றனர்.
தெற்கு காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான், அனந்தநாக், குல்காம் உள்ளிட்ட பெரும்பா லான மாவட்டங்களில் சமீபகால மாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலை யில் காவல்துறையில் பணியாற்று வோர் மறு அறிவிப்பு வரும்வரை சொந்த ஊருக்கு, குறிப்பாக தெற்கு காஷ்மீர் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
“சொந்த ஊர் செல்வதில் உள்ள ஆபத்து பற்றி உமர் பயஸுக்கு நன்கு தெரியும். என்றாலும் ஆயுதமின்றி செல்வது குறித்து அவர் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்கவில்லை” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜேட்லி கண்டனம்
பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று விடுத்துள்ள செய்தியில், “தீவிரவாதிகளால் உமர் ஃபயஸ் கடத்திச் செல்லப் பட்டு, கொல்லப்பட்டது கோழைத் தனமாக செயல். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்த இளம் அதிகாரி ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்” என்று கூறியுள்ளார்.