அரவிந்த் சுப்பிரமணியன் மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது: அருண் ஜேட்லி

அரவிந்த் சுப்பிரமணியன் மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது: அருண் ஜேட்லி
Updated on
1 min read

தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை தொடர்ந்து அரவிந்த் சுப்பிரமணியன் மீதும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் வைத்த நிலையில், அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மீது வெறுப்பை உமிழ்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தற்போது தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீதும் ட்விட்கள் மூலம் தாக்குதல் விமர்சனம் செய்துள்ளார்.

புதனன்று தொடர் ட்வீட்களில் சுப்பிரமணியன் சுவாமி, அறிவுசார் காப்புரிமை விவகாரத்தில் மோடியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்தியாவை எதிர்த்து வந்துள்ளார் என்றும், 13/3/2013-ல் யு.எஸ். காங்கிரஸிடம் அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்க மருத்துவத்துறை நலன்களைக் காப்பதற்காக இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வலியுறுத்தினார், அவரை உடனடியாக நீக்குங்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாட்டின் பின்னணியில் அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளதாக சுவாமி மேலும் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

“ஜி.எஸ்.டி. மசோதாவில் காங்கிரஸார் இவ்வளவு விடாப்பிடியாக உள்ளதன் பின்னணியில் யார் உள்ளார் என்பதை யூகிக்கவும். ஜெட்லியின் பொருளாதார ஆலோசகரான வாஷிங்டன் டி.சி.யின் அரவிந்த் சுப்பிரமணியன் என்பவர்தான்” என்று அவர் ட்வீட் செய்தது தற்போது பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “அதிகாரிகள் மீது அரசியல்வாதிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்” என்றார்.

மேலும், அரசுக்கு அருண் சுப்பிரமணியன் மீது முழு நம்பிக்கை உள்ளது என்றும், அவரது ஆலோசனை மதிப்பு மிக்கது என்றும் அருண் ஜேட்லி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

மேலும், ரகுராம் ராஜன் குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனங்களிலும் நாங்கள் உடன்படவில்லை என்றும் அருண் ஜேட்லி இது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in